குடிநீர் கேட்டு அவினாசி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீர் கேட்டு அவினாசி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அவினாசி,
அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையம் ஊராட்சி ஆலாம்பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைந்துள்ளது. இந்த காலனியில் சுமார் 100 குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2 மாதங்களாக இந்த காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமரசம்செய்தனர். பின்னர், அவர்கள் ஒன்றிய ஆணையாளரிடம், தங்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மனு கொடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.