வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்

வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-04-17 23:00 GMT

திண்டுக்கல்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நேற்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அப்போது, விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

ரே‌ஷன்கடைகளில் மாதந்தோறும் வழங்கப்படும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் (அரசு விடுமுறை நாட்களை தவிர) தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். வேலை உறுதி அளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும்.

வேலை உறுதி அளிப்பு திட்டத்தை...

மேலும், ஊதியத்தை தாமதமின்றி ஊழல், முறைகேடுகள் இல்லாமல் வழங்க வேண்டும். ஊதிய நிலுவை தொகை ரூ.1,000–க்கு ரூ.50 வீதம் வட்டி போட்டு வழங்க வேண்டும். வேலை உறுதி அளிப்பு திட்டத்தை பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். சுய உதவிக்குழுக்கள், வங்கியில்லாத சிறு கடன் நிறுவனங்கள் மூலம் நிலமற்றோர் பெற்றுள்ள கடன்களை அரசே ஏற்று வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்