பழனிசெட்டிபட்டி, கம்பம் பகுதியில் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

பழனிசெட்டிபட்டி, கம்பம் பகுதியில் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-17 23:00 GMT

பழனிசெட்டிபட்டி

தேனி அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வந்தது. நெடுஞ்சாலை ஓரத்தில் அந்த கடை இருந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி அது மூடப்பட்டது. பின்னர் அந்த கடையை கொடுவிலார்பட்டி சண்முகாநகர் பகுதியில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள ஒரு கட்டிடத்தில் மதுபான கடை அமைக்கும் பணியும் தொடங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொடுவிலார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகளும் பங்கேற்றனர். அப்போது மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி தாசில்தார் சேக் அயூப் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

இதே போல் கம்பம் நகராட்சி 32–வது வார்டு பகுதியில் உள்ள கக்கன் காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மதுபான கடைகள் திறக்கப்பட்டன. குடியிருப்பு பகுதியில் அந்த மதுபான கடைகள் இருப்பதால் அவற்றை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கம்பம்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதியில் உள்ள 2 மதுபான கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த உத்தமபாளையம் தாசில்தார் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுபான கடைகளை மூடும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபான கடைகளை மூடினர். அதன் பின்னரே போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்