தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு அரை நிர்வாணமாக வந்து ஆதார் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அரை நிர்வாணமாக வந்து ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-04-17 23:00 GMT

தேனி

டெல்லியில், தமிழக விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார் அட்டை ஒப்படைப்பு

போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், ‘தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பிரதமர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைக்கு நாங்கள் அரை நிர்வாணமாக வந்து மாவட்ட கலெக்டரிடம் ஆதார் அட்டையை ஒப்படைக்க உள்ளோம்’ என்றனர்.

இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று, கலெக்டர் வெங்கடாசலத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அத்துடன் சுமார் 25 பேரும் தங்களின் ஆதார் அட்டையையும் ஒப்படைத்தனர். அந்த ஆதார் அட்டைகளை முதலில் கலெக்டர் வாங்க மறுத்தார். பின்னர், தங்களின் போராட்டமே அட்டையை ஒப்படைப்பது தான் என்று கூறி ஆதார் அட்டையை கலெக்டரிடம் வழங்கினர். கலெக்டரும் அந்த அட்டைகளை பெற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்