வால்பாறையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை, போக்குவரத்து துண்டிப்பு

வால்பாறையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-04-17 22:45 GMT

வால்பாறை,

வால்பாறை வட்டார பகுதியில் கடந்த 3 மாதமாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வறட்சி நிலவுகிறது. ஆறுகள், நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி காரணமாக வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீப்பிடித்தது. இந்த நிலையில் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்தது.

வால்பாறை வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 10.30 மணிவரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் வழியில் உருளிக்கல் எஸ்டேட் 60 ஏக்கர் பகுதியில் ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதனால் அந்த மரம் துண்டு துண்டாக சிதறியது. அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

அதே போல வறட்டுப்பாறையில் இருந்து வில்லோணி எஸ்டேட்டிற்கு செல்லும் வழியில் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த ரோட்டில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். மின்தடை ஏற்பட்டதால் அந்த பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

உருளிக்கல் எஸ்டேட் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மானாம்பள்ளி எஸ்டேட்டிற்கு செல்லும் சாலையில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர், தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள், வால்பாறை தீயணைப்புத்துறையினர் ஆகியோர் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து நேற்று காலை 8 மணிக்கு போக்குவரத்து சரியானது.

மழையளவு

இது போல் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் பல இடங்களில் ஆங்காங்கே மரக் கிளைகள் முறிந்து தேயிலை தோட்டங்களில் விழுந்தது. இதை அகற்றும் பணியில் எஸ்டேட் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 2 மி.மீ. மழை, சோலையார் அணையில் 1 மி.மீ. சின்னக்கல்லார், நீராரில் தலா 4 மி,மீ. மழை பெய்துள்ளது. வால்பாறை பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் சென்று சேரும் வகையில் சோலையார் அணை வடிவமைக்கப்பட்டு உள்ளது. நேற்றுமுன்தினம் பெய்த மழை காரணமாக சோலையார் அணைக்கு வினாடிக்கு 56 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 7.23 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்