தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: மாநில பொருளாளர் பேட்டி

வருகிற 25–ந்தேதி முதல் தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மாநில பொருளாளர் பேட்டி

Update: 2017-04-17 23:00 GMT

ஊட்டி

தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக மாநில பொருளாளர் தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் தங்கராஜ் நேற்று ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:– மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமி‌ஷன் பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாநில அரசு உடனடியாக சம்பள கமி‌ஷன் அமைத்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

7–வது ஊதியக்குழுவில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளை நீக்கி சம்பள உயர்வு வழங்க வேண்டும். மாநில அரசு சம்பள உயர்வு வழங்கும்வரை 20 சதவீத கிடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

3 லட்சம் காலி பணியிடங்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இதற்கு 4–வது முறையாக காலநீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு உடனடியாக இளைஞர்களை நியமனம் செய்ய வேண்டும். தற்போது சத்துணவு துறை, நெடுஞ்சாலை துறை, ஊராட்சி உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் கல்வி தகுதிக்கு தகுந்தாற் போல் பணி உயர்வு வழங்க வேண்டும்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிதரக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை மத்திய, மாநில அரசுகள் அழைத்து பேச வேண்டும். தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேற்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து ஊட்டியில் உள்ள அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. எனவே போராட்டத்திற்கு முன்னதாக தமிழக அரசு, அனைத்து அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்