டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த பல டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.
அதன்படி மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள ஈரோடு–முத்தூர் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடையை எழுமாத்தூரில் இருந்து பாசூர் வழியாக நாமக்கல் செல்லும் ரோட்டில் உள்ள பாரதி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்கும் பணியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.
எதிர்ப்பு தெரிவித்து மனுஇதற்கிடையே பாரதி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பாரதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பாண்டிபாளையம், சின்னுசாமிபுரம், செல்லாத்தாபாளையம், பட்டாஸ்பாளி, வெப்பிலி, பொய்யேரி, ஆனந்தம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் மேலாளர், மொடக்குறிச்சி தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘பாரதி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் மாலை நேரங்களில் வீடுகள் திரும்பும்போது பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே பாரதி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது,’ என்று குறிப்பிட்டிருந்தனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன், புதிய டாஸ்மாக் கடை கட்டும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
சாலை மறியல்இந்த நிலையில் பாரதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் எழுமாத்தூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஈரோடு–முத்தூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட அதிகரிகள் இங்கு வந்து டாஸ்மாக் கடை அமைக்கமாட்டோம் என்று உறுதி மொழி கொடுத்தால்தான் எங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம்,’ என்று தெரிவித்தனர். உடனே இதுகுறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
காத்திருப்பு போராட்டம்இதற்கிடையே போலீசார் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 9.30 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு ரோட்டோரம் உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதா தேவி, மொடக்குறிச்சி தாசில்தார் மாசிலாமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் அதிகரிகள் கூறுகையில், ‘பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தற்போது பாரதிநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது. வேறு இடம் தேர்வு செய்து புதிய டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று உறுதி அளித்தனர். இந்த பதிலில் திருப்தி அடைந்த பொதுமக்கள் பகல் 11 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெருந்துறைஇதேபோல் பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில் செல்லும் ரோட்டில் மாந்தம்பாளையம் பிரிவு, தீர்த்தாம்பாளையம் பிரிவு ஆகிய 2 இடங்களில் புதிதாக டாஸ்டமாக் கடை அமைக்கும் பணியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்ததும் வெள்ளியம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், மாந்தம்பாளையம், பாலன்நகர், தீர்த்தாம்பாளையம், செங்காடு, குருவங்காடு, பாறைக்கடை, செல்லப்பகவுண்டன்வலசு, சூரியம்பாளையம், சீலம்பட்டி, மொண்டிபுளியன்காடு, எல்லப்பாளையம், எல்லப்பாளையம்புதூர், சடையகவுண்டன்வலசு, கருக்கம்பாளையம் ஆகிய 16 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர், மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். ஆனாலும் மாந்தம்பாளையம் பிரிவு, தீர்த்தாம்பாளையம் பிரிவு ஆகிய 2 இடங்களில் டாஸ்மாக் கடை கட்டும் பணி நடந்து வந்தது.
16 கிராமங்களை சேர்ந்த...இந்த நிலையில் 16 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு மாந்தம்பாளையம் பிரிவு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை பகுதிக்கு நேற்று காலை 8.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் செந்தில்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் டாஸ்மாக் அதிகாரிகள் இங்கு வந்து நேரில் உறுதிமொழி கடிதம் எழுதி கொடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள்.
உறுதிமொழி கடிதம்இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக துணை மேலாளர் குப்புராஜ் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், ‘நீங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ள 16 கிராமங்களின் அருகில் கூட எந்தவொரு டாஸ்மாக் கடை அமைக்கப்படமாட்டாது,’ என்றார். மேலும் டாஸ்மாக் கடை அமைக்கமாட்டோம் என்ற உறுதிமொழி கடிதத்தையும் பொதுமக்களிடம் வழங்கினார்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் காலை 10.30 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பெருந்துறை–காஞ்சிக்கோவில் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.