மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.42 லட்சத்தில் செயற்கை சுவாசக் கருவிகள்
மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.42 லட்சத்தில் புதிய ஆக்சிஜன் குழாய்கள், செயற்கை சுவாசக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை,
மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.42 லட்சத்தில் புதிதாக ஆக்சிஜன் குழாய்கள், செயற்கை சுவாசக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டீன் வைரமுத்து ராஜூ கூறியதாவது:– மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தநிலையில் நாளுக்கு நாள் பெருகி வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும் வகையில் தற்போது ரூ.42 லட்சம் செலவில் புதிதாக ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஆஸ்பத்திரியில் 140 ஆக்சிஜன் வெளி செலுத்தும் குழாய்கள் மட்டுமே இருந்தன. தற்போது 1350 ஆக்சிஜன் வெளி செலுத்தும் குழாய்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. செயற்கை சுவாச கருவிகள் ஆரம்ப காலகட்டத்தில் 8 மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 80க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளன.
தங்குதடையின்றிமேலும் குழாய்களின் விட்டம் 15 மில்லிமீட்டர் அளவுள்ளதாக மட்டுமே பொருத்தப்பட்டிருந்தன. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. அதனை சரிசெய்ய திரவ ஆக்சிஜன் தொட்டியிலிருந்து வெளிவரும் ஆக்சிஜனின் அழுத்தம் மற்றும் அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் செயற்கை சுவாச கருவிகள் செயல்படும் விதமாக அனைத்து குழாய்களையும் 28 மில்லிமீட்டர் விட்டமுள்ள ஆக்சிஜன் குழாய்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் தீவிர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு தங்குதடையின்றி ஆக்சிஜன் கொண்டு செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.