விபத்தில் தந்தை பலி: நிவாரண நிதி கோரி தாயுடன் மாற்றுத்திறனாளி திடீர் உண்ணாவிரதம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவருடைய மனைவி ஆராய்ச்சிமணி. கடந்த ஆண்டு
கடலூர்,
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவருடைய மனைவி ஆராய்ச்சிமணி. கடந்த ஆண்டு புதுச்சேரி பஸ் நிலையத்தில் நடந்த சாலை விபத்தில் கோதண்டபாணி இறந்து விட்டார். இதையடுத்து ஆராய்ச்சிமணி, இளைய மகன் மாற்றுத்திறனாளி சந்தோஷ் ஆகிய 2 பேரும் தமிழக முதல்–அமைச்சர் நிவாரண நிதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பினர். ஆனால் புதுச்சேரியில் சாலை விபத்தில் இறந்தால் நிவாரணம் கிடைக்காது என்று கடலூர் மாவட்ட அதிகாரிகள் கூறி விட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஆராய்ச்சிமணி, மாற்றுத்திறனாளி சந்தோஷ் ஆகிய இருவரும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அறைக்கு வெளியே தாயுடன், மாற்றுத்திறனாளி சந்தோஷ் திடீரென கையில் கருப்பு கொடியை ஏந்தி உண்ணாவிரதம் இருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் புதுநகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உரிய பதில் கிடைக்காமல் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி விட்டனர்.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான இடத்துக்கு வந்து மனுக்களை வாங்க வந்த போது கலெக்டரிடம் சந்தோஷ் முறையிட்டு மனு அளித்தார். அந்த மனுவில், முதல்–அமைச்சர் நிவாரண நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை இருவரும் வாபஸ் பெற்றனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.