சாலையை சீரமைக்கக்கோரி திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் சாலை பள்ளங்களில் பிணத்தை புதைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்

திருப்பத்தூரில் சாலையை சீரமைக்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் உள்ள பள்ளங்கள்

Update: 2017-04-17 23:15 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சாம்பான் ஊருணியில் இருந்து மதுரை செல்லும் சாலை மற்றும் சிவகங்கை செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இதில் நான்கு ரோடு, பஸ் நிலையம், அண்ணாசிலை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகேயுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சியளிக்கின்றன. இதேபோல் மாநில நெடுஞ்சாலையாக உள்ள மதுரை ரோடு, புதுத்தெரு வழியாக திண்டுக்கல் ரோட்டினை இணைக்கும் சாலை, கறிக்கடை வீதி, சிங்கம்புணரி ரோடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

பிணம் புதைக்கும் போராட்டம்

இந்தநிலையில் நேற்று திருப்பத்தூர் நான்கு ரோடு பகுதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பாடையில் பிணம் இருப்பது போன்று சித்தரித்து உருவப்பொம்மை எடுத்து வந்தனர். பின்னர் கட்சியினர் பிணத்துடன் கூடிய பாடையை தூக்கிக்கொண்டு நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பஸ் நிலையம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி, சாலையில் உள்ள பள்ளங்கள், குழிகளில் பிணம் புதைக்கும் நூதன போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்தினர்.

போராட்டத்தின்போது பெண்கள் சாலையில் பிணத்தை வைத்து ஒப்பாரி பாடி, சாலையினை சீர்செய்ய வேண்டும் என்று கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பின்னர் கட்சியினர் மதுரை ரோடு வழியாக ஊர்வலமாக சென்று சிவகங்கை ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய தலைவர் சின்னக்கருப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாச்சியப்பன், நகர செயலாளர் ஜியாவுதீன், ஒன்றிய துணை செயலாளர் அடைக்கண் மற்றும் லட்சுமி, ருக்குமணி, சிட்டு, சிகப்பி உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்