பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் மே 1–ந்தேதி நடக்கிறது
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் வருகிற 1–ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.;
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் நகரத்தார் கோவிலான இந்த கோவில் பழமை வாய்ந்த குடவரை கோவிலாகும். இந்த கோவிலில் கோபுரங்கள், தளவரிசைகள் பழுது பார்க்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.
கும்பாபிஷேகம்இந்தநிலையில் கோவிலில் வருகிற 1–ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த விழா கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. வருகிற 24–ந்தேதி காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதனையடுத்து 25–ந்தேதி நவக்கிரக ஹோமம், 27–ந்தேதி முதலாம் கால யாகசாலை பூஜையும், மறுநாள்(28–ந்தேதி) 2–ம் மற்றும் 3–ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறும். இதன்பிறகு 29–ந்தேதி 4–ம் மற்றும் 5–ம் கால யாகசாலை பூஜைகளும், 30–ந்தேதி 6–ம் மற்றும் 7–ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளன.
ஏற்பாடுஇதனையடுத்து மே 1–ந்தேதி காலை 4.30 மணிக்கு 8–ம் கால யாகசாலை பூஜையும், காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை மகா அபிஷேகமும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகர் கோவில் நகரத்தார் செய்து வருகின்றனர்.