திருவண்ணாமலையில் விவசாய சங்கங்களின் சார்பில் அரை நிர்வாண போராட்டம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்தது

திருவண்ணாமலையில் வறட்சி நிவாரணம் முறையாக வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பட்டை, நாமம் போட்டு

Update: 2017-04-17 23:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் வறட்சி நிவாரணம் முறையாக வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சாமி தலைமை தாங்கினார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சிவக்குமார், அண்ணா சிறுவிவசாயிகள் சங்க கீழ்பென்னாத்தூர் கிளை தலைவர் சுப்பிரமணி, துணைத்தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஏழுமலை வரவேற்றார்.

அரை நிர்வாண நிலையில்...

இதில் வறட்சி நிவாரணம் முறையாக வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன், நகைக்கடன், பண்ணை சாராக்கடன் போன்றவை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வயிறு, நெற்றியில் பட்டை, நாமம் போட்டு அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஐயாயிரம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி சிவலிங்கம், திராவிட விவசாய சங்க ஒன்றிய தலைவர் கானாலாபடி துரைராஜ், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கலசபாக்கம் ஒன்றிய தலைவர் சண்முகம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கமலபுத்தூர் ஒன்றிய செயலாளர் முருகன், புதிய தேசிய விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்