மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.1 கோடி மோசடி: சசிகலா உறவினர் ராவணன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்
அ.தி.மு.க. பிரமுகருக்கு மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி
வேலூர்,
வேலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான ஜி.ஜி.ரவி வேலூரில் மணல் குவாரி நடத்துவதற்கு உரிமம் பெறுவதற்காக 2011–ம் ஆண்டு அ.தி.மு.க. (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினரான ராவணனை அணுகியிருக்கிறார். அதற்கு அவர் மணல் குவாரி நடத்த உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி ஜி.ஜி.ரவியிடம் ரூ.1 கோடி பெற்றதாகக் கூறப்படுகிறது.
பணம் கொடுத்த சிறிதுகாலத்தில் ஜி.ஜி.ரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவருக்கு மணல் குவாரி நடத்துவதற்கு ராவணன் உரிமம் பெற்றுத் தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜி.ஜி.ரவி புகார் செய்தார். அதன்பேரில் ராவணன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்மேலும் இதுகுறித்து வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2–ல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மணல் குவாரி நடத்த ரூ.1 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஆஜராக ராவணன் நேற்று வேலூர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர் மாஜிஸ்திரேட்டு லாவண்யா முன்பு ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு லாவண்யா வழக்கு விசாரணையை வருகிற 24–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து ராவணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.