கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மண்எண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்தனர்.;

Update: 2017-04-17 23:30 GMT

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடந்தது. மவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, ரே‌ஷன்அட்டை, வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மண்எண்ணெய் கேனுடன்...

ஆம்பூரை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 15–க்கும் மேற்பட்டவர்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் 5 லிட்டர் கேன் மற்றும் ஒரு லிட்டர் பாட்டிலில் மண்எண்ணெயுடன் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே இருந்து மண்எண்ணெயுடன் மனுகொடுக்க சென்ற அவர்களை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து விமலநாதன் என்பவருடைய தலைமையில் அவர்கள் கலெக்டர் ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள், எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சிக்னலை அடிக்கடி துண்டித்து விடுகிறார்கள். இதனால் எங்களால் தொழில் செய்யமுடியவில்லை. இதுகுறித்து கேட்டால் எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தர்ணா போராட்டம்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த கணபதி நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனரான சேகர் (வயது 50) என்பவர் குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதேமில்லத் அரங்கம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதையறிந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ‘குடியாத்தம் பகுதியில் 30–க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் அரசு மானியம் மூலம் பஞ்சுகளை வாங்கி போலி பில் போட்டு தனியார் ஆலைகள் மூலம் உற்பத்தி செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதுபற்றி கேட்டால் அவர்கள் என்னை தாக்கி மிரட்டல் விடுகின்றனர்’ என்றார்.

அதைத்தொடர்ந்து அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார்.

மதுக்கடையை அகற்ற வேண்டும்

காட்பாடி தாலுகா ஜாப்ராபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் தங்கள் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக புதிதாத மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மதுக்கடை அருகில் பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், கோவில் உள்ளது. இதனால் பெண்கள், மாணவ– மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உடனடியாக மதுக்கடையை அங்கிருந்து அகற்றவேண்டும். இல்லையென்றால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறி உள்ளனர்.

கூட்டத்தில் தாட்கோ நிறுவனத்தின் மூலம் 17 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்