நுகர் சக்தியை மீட்டுத்தரும் ‘சென்ட்’

நமது நுகரும் சக்தியை மேம்படுத்தும் நவீன ‘சென்ட்’ தயாரிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-04-17 09:26 GMT
வாசனைத் திரவியங்கள் (சென்ட்) அனைத்தும் செயற்கை வாசனைகளையே தரும். நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சென்ட் ஒன்று, நாம் இழந்துபோன நுகரும் சக்தியை மீட்டுத் தருகிறது.

சில நேரங்களில் வைரஸ் தொற்றுகளால் சளித் தொல்லை ஏற்படும்போது நம்மால் சரிவர சுவாசிக்கவும், வாசனையை நுகரவும் முடியாமல் போகும். காய்ச்சல் போன்ற பாதிப்புகளின்போது நாக்கினால் உணவை சுவை பார்த்தால் சுவையற்றும், கசப்பாகவும் உணரலாம். வைரஸ்களின் இது போன்ற தாக்குதல்களின்போது சுவையையும், வாசனையையும் மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் இங்கிலாந்தின் ஈஸ்ட் அங்லியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் ஜேம்ஸ் பேகட் பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வுக் குழுவினருடன் இணைந்து, ஈடுபட்டனர்.

ஆய்வின் பயனாக, ‘சோடியேம் சிட்ரேட்’ அடங்கிய உறிஞ்சு ஸ்பிரே ஒன்றை உருவாக்கினர். இதை உறிஞ்சும்போது இழந்துபோன வாசனை நுகர்திறன் தற்காலிகமாக திரும்புகிறது. சோடியம் சிட்ரேட் ஏற்கனவே மருந்தாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் இதை நேரடியாக மனிதர்களிடமே சோதித்துப் பார்த்தனர். சோடியம் சிட்ரேட் ஸ்பிரேயை சிலருக்கும், கிருமி நீக்கம் செய்யப்பட்ட தண்ணீர் ஸ்பிரேயை சிலருக்கும் உறிஞ்சக் கொடுத்து ஆய்வு நடத்தினர்.

சோடியம் சிட்ரேட் ஸ்பிரேயை உறிஞ்சியவர்களால் அடுத்து ரோஜா பூவின் நறுமணம், வினிகர் மற்றும் மெத்தனால் ஆகியவற்றின் வாசனையை பிரித்தறிய முடிந்ததாம். வைரஸ் பாதிப்பின் இடையே, சுமார் 30 நிமிட நேரத்துக்கு தற்காலிகமாக வாசனை நுகர் சக்தியை இந்த ஸ்பிரே மீட்டு வழங்குவதாக ஆய்வாளர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள். விரைவிலேயே இந்த ஸ்பிரே விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்