புற்றணுக்களை அழிக்கும் செயற்கை தைமஸ் சுரப்பி!

புற்றணுக்களைக் கொல்லும் ‘டி’ உயிரணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை தைமஸ் சுரப்பியை உருவாக்கி அசத்தியிருக்கின்றனர் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.;

Update: 2017-04-17 09:10 GMT
இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல மாற்றுப் பாகங்களை தானமாகக் கொடுப்பவர்களுக்காக காத்திருக்காமல், செயற்கை பாகங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தும் காலமிது! சமீபத்திய உயிர்
மருத்துவ தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தால் சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் போன்ற உடல் பாகங்களுக்காக மக்கள் மனித கொடையாளர்களை எதிர்பார்த்துக் காத்திராமல் செயற்கை பாகங்களை பொருத்திக் கொண்டு இயல்பு வாழ்க்கை வாழக்கூடிய காலம் விரைவில் வரக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

அந்த வரிசையில் தற்போது, மிகவும் சுவாரசியமாக, புற்றணுக்களைக் கொல்லும் ‘டி’ உயிரணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை தைமஸ் சுரப்பியை உருவாக்கி அசத்தியிருக்கின்றனர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் இன்றியமையாத ஒரு பாகம்தான் இந்த தைமஸ் சுரப்பி! உடலைத் தாக்குகின்ற வைரஸ்கள், பாக்டீரியா தொற்றுக் கிருமிகள் மற்றும் புற்றணுக்கள் ஆகிய அனைத்தையும் கொன்று உடலை விட்டு நீக்கும் திறன்கொண்ட ‘டி’ செல் எனப்படும் ஒரு வகையான வெள்ளை ரத்த அணுக்களை தைமஸ் சுரப்பிதான் உற்பத்தி செய்கிறது.

ஆனால் மனிதர்கள் நோய்வாய்ப்படும்போது தைமஸ் சுரப்பியால் ‘டி’ செல்களை சரி வர உற்பத்தி செய்ய முடியாது! முக்கியமாக, சில வகையான புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் ‘டி’ செல் உடலில் இல்லாமல் போவதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய நோயாளிகளுக்கு தற்போது ‘டி’ செல் நோய் எதிர்ப்பு சிகிச்சை (T cell immunotherapy)  என்ற ஒரு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு நோயாளியின் பழுதடைந்த ‘டி’ செல்களை எடுத்து அதனை சரி செய்து பின்னர் உடலுக்குள் செலுத்தப்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு உடலில் போதுமான எண்ணிக்கையில் ‘டி’ செல்கள் இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த சிகிச்சையை மேற்கொள்ள நீண்டகாலம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நடைமுறைச் சிக்கலுக்கு ஒரு தீர்வு காண, ரத்த ஸ்டெம் செல்களில் இருந்து ‘டி’ செல்களை உற்பத்தி செய்யக்கூடிய திறன்கொண்ட செயற்கை தைமஸ் சுரப்பிகளை உற்பத்தி செய்துள்ளனர் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மிகவும் சுவாரசியமாக, இந்த செயற்கை தைமஸ் சுரப்பியில் புற்றணுக்களை மட்டும் இனம்கண்டு அழிக்கும் ‘டி’ செல்கள் உற்பத்தியாகின்றன. இந்த பிரத்யேக திறனை ஏற்படுத்த ஸ்டெம் செல்களில் புற்றணுக்களை இனம் காண உதவும் ஒரு மரபணு பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் நோயாளிகளின் உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்கள் மற்றும் திசுக்களை ‘டி’ செல்கள் தாக்காமல் புற்றணுக்களை மட்டும் அழிக்கும் என்பது கவனிக்கத்தக்கது!

முக்கியமாக, புற்றணுக்களை அழிக்கும் ‘டி’ செல்களை உற்பத்தி செய்யும் இந்த செயற்கை தைமஸ் மூலம் புற்றுநோய் மருத்துவத்துக்கு ஆகும் செலவு பெருமளவு குறையும். மேலும், அத்தகைய சிகிச்சைகளால் ஏற்படும் ஆபத்துகளும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக, மனித ஆய்வுகளை நோக்கி பயணிக்கும் இந்த செயற்கை தைமஸ் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்வரை வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதும் மகிழ்ச்சிதானே!

மேலும் செய்திகள்