போலீசுக்கு பெண் அனுப்பிய தகவலால் பரபரப்பு மும்பை விமானத்தை கடத்த திட்டமா? விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

மும்பையில் இருந்து செல்லும் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்த திட்டமிட்டு இருப்பதாக போலீசுக்கு பெண் அனுப்பிய இ-மெயில் தகவலை தொடர்ந்து விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2017-04-16 23:00 GMT
மும்பை,

மும்பையில் இருந்து செல்லும் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்த திட்டமிட்டு இருப்பதாக போலீசுக்கு பெண் அனுப்பிய இ-மெயில் தகவலை தொடர்ந்து விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

மும்பையில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து நேற்று முன்தினம் இரவு மும்பை போலீசாருக்கு ஒரு இ-மெயில் வந்தது.

கடத்த திட்டமா?


மும்பை, சென்னை, ஐதராபாத் விமான நிலையங்களில் இருந்து செல்லும் பயணிகள் விமானத்தை கடத்தப்போவதாக 6 வாலிபர்கள் (பயங்கரவாதிகள்) பேசிக்கொண்டதை தான் கேட்டதாக அந்த இ-மெயிலில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து மும்பை போலீசார் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமைகளுக்கு இதுபற்றிய தகவலை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய 3 விமான நிலைய அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினர்.

அறிவுறுத்தல்

அப்போது சம்பந்தப்பட்ட 3 விமான நிலையங்களிலும் விமான கடத்தலை முறியடிக்கவேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து விமான சேவை நிறுவனங்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய முகமைகள் நாசவேலை முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இதுகுறித்து விமான போக்குவரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மும்பை, சென்னை, ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 3 விமானங்களை 23 பேர் கொண்ட கும்பல் கடத்த திட்டமிட்டுள்ளதாக பெண் ஒருவர் அனுப்பிய இ-மெயிலில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து விமானநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது’ என கூறினார்.

7 அடுக்கு பாதுகாப்பு

நேற்று மும்பை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையத்துக்கு வந்த விமான பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் உடைமைகள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டன. சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டது. விமான நிலையத்துக்கு வந்த அத்தனை வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. வழக்கமாக சுதந்திரதினம், குடியரசு தினத்தன்று மட்டுமே இதுபோன்ற தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அதிக கெடுபிடி செய்யப்பட்டது.

கூடுதல் படை குவிப்பு

மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தங்களுடைய மோப்ப நாய் பிரிவையும் விமான நிலையத்துக்கு வரவழைத்து சோதனையில் ஈடுபடுத்தினர். தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டன. உடனடி பதில் நடவடிக்கை குழுவினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் சென்னை, ஐதராபாத் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இது தவிர, விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணி தீவிரமாக்கப்பட்டது. போலீசார் விமான நிலையம் வரும் பாதையில் தீவிர வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். விமான நிலையத்தையொட்டி ஓட்டல்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

எச்சரிக்கை

இதுபற்றி மத்திய தொழிற் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ஓ.பி.சிங் கூறுகையில், “மும்பை, சென்னை, ஐதராபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன” என்றார்.

மும்பை விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் பயணிகள் பீதி அடைய தேவையில்லை. இதனால் பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது” என்றார்.

இதற்கிடையே, தங்களுக்கு வந்த இ-மெயில் குறித்தும், அதை அனுப்பியவருடன் தொடர்புகொள்வதிலும் மும்பை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்