வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Update: 2017-04-16 22:45 GMT
வேளாங்கண்ணி,

ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் உயிர்விட்ட ஏசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாள் உயிர்த்து எழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ஈஸ்டர் பெருவிழாவாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களிலேயே மிக முக்கிய திருவிழாவாக ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் ஈஸ்டர் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் “பாஸ்கா ஒளி” ஏற்றப்பட்டது. தொடர்ந்து பாஸ்கா அறிக்கை, இறைவார்த்தை வழிபாடு, நற்கருனை வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 11.50 மணிக்கு மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கியவாறு ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி

இதில் பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருள்சகோதரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஈஸ்டர் பெருவிழா பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. ஈஸ்டர் பெருவிழாவையொட்டி பேராலயத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைதொடர்ந்து மாலை 6.45 மணிக்கு தேர்பவனியும், 7.45 மணிக்கு திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்