நெல்லை டவுன் கிறிஸ்தவ ஆலயத்தில் வெள்ளி கிரீடம் திருட்டு

நெல்லை டவுனில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2017-04-16 22:15 GMT
நெல்லை,

நெல்லை டவுன் சாலை தெருவில் அடைக்கல மாதா கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஆலயம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நள்ளிரவில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். அதிகாலை 3 மணி வரை கிறிஸ்தவ பாடல்களை இன்னிசை குழுவினர் பாடினர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்றனர். மீண்டும் காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற இருந்தது. அப்போது, அங்கு ஆலய பங்கு தந்தை மைபா.ஜேசுராஜ் வந்தார்.

வெள்ளி கிரீடம் திருட்டு


அப்போது, மாதா தலையில் அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி கிரீடம் திருடப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆலயத்தில் புகுந்த மர்ம நபர்கள் வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி, அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்