ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்திகளை ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

Update: 2017-04-16 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடி சின்னக்கோவிலில் பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது, ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுவது போன்று தத்ரூபமான காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் குடும்பத்தினருடன் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஆறுமுகநேரி


ஆறுமுகநேரி புனித சவேரியர் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு தொடங்கிய சிறப்பு திருப்பலி நேற்று அதிகாலை 2 மணி வரை நடந்தது. பங்கு தந்தை ஸ்டார்வின் அடிகளார் தலைமை தாங்கினார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு ஜெபம் செய்தனர்.

ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பெங்களுரூ குருமட நிர்வாகி லட்ரீன் தலைமையில் திருப்பலி நடந்தது. காயல்பட்டினம் சிங்கிதுரை புனித செல்வமாதா ஆலயத்தில் பங்கு தந்தை சேவியர் ஜார்ஜ் தலைமையிலும், கொம்புதுரை புனித முடியப்பர் ஆலயத்தில் பங்கு தந்தை மரிய ஜான்சன் தலைமையிலும் திருப்பலி நடந்தது. புன்னகாயல் ராஜகன்னி மாதா ஆலயத்தில் பங்கு தந்தை கிஷோர் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் துணை பங்கு தந்தை சந்தியாகு அடிகளார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.ஐ. ஆலயம்


ஆறுமுகநேரி மடத்துவிளை சி.எஸ்.ஐ. புனித யோவான் ஆலயத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சிறப்பு ஜெபமாலை நடந்தது. ஆலய சேகர குரு எட்வின் ஜெபராஜ் தலைமை தாங்கினார். இதில் திரளான சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி


கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஈஸ்டர் திருப்பலி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடந்தது. பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மை குரு டரான்ஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் புனித வளனார் ஆலய பங்கு தந்தை பீட்டர் அடிகளார், உதவி பங்கு தந்தை சேவியர் மற்றும் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்