தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2017-04-16 22:45 GMT
சென்னை,

தென்கிழக்கு வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று காலை அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘மாருதா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

மாருதா புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து மியான்மர் நாட்டின் சண்டோவே கடற்கரை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலைக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் எந்த தாக்கமும் இருக்காது. தமிழக கடற்கரை பகுதியில் உள்ள ஈரப்பதத்தை மாருதா புயல் உறிஞ்சி சென்றுவிட்டதன் காரணமாக, தமிழகத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்துவிட்டது. இதனால் நேற்று தமிழகத்தில் வெயிலின் அளவு அதிகரித்தது. தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

வறண்ட வானிலை

இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாருதா புயல் காரணமாக கடலூர், நாகை, எண்ணூர் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்