காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்காதீர்கள் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

திருடர்களின் கவனம் கிராமப்புறங்களில் திரும்பி உள்ளதால் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்காதீர்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி எச்சரித்தார்.

Update: 2017-04-16 23:00 GMT
திருக்கனூர்,

திருக்கனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் நல்லுறவு கூட்டம் கே.ஆர்.பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்தழகன் மற்றும் திருக்கனூரை, சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து பேசும்போது கூறியதாவது:-

திருக்கனூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பொருட்களை வாங்க திருக்கனூர் கடை வீதிக்கு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் ஏராளமானவர்கள் வருகிறார்கள். அவர் களுக்காக திருக்கனூர் கடைவீதியில் கழிப்பிட வசதி ஏற்படுத்திட வேண்டும். பெட்ரோல் பங்க் அருகே பயணிகள் நிழற்குடை இருந்த இடத்தில் தற்போது பாண்லே பாலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் வெயில் மற்றும் மழைக் காலங்களில் மக்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே அந்த இடத்தில் மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும். திருக்கனூர் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அரசு மூலம் நிறைவேற்றப்படும்

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி பேசும்போது கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து, அரசு மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கிராமப்புற மக்களைவிட நகர்ப்புற மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். மேலும் நகர்புறங்களில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதனால் திருடர்களின் கவனம் கிராமப் புறத்தை நோக்கி திரும்பியுள் ளது. அவர்கள் நகர்புறங்களை தவிர்த்துவிட்டு, திருடுவதற்காக கிராமப்புறங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

எனவே கிராமப்புற மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போது கோடை காலம் என்பதால் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்க வேண்டாம். உங்கள் பகுதியில் யாராவது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்