மது பாட்டில்கள் வாங்கி விட்டு சாலையை கடக்க முயன்றவர் மீது பஸ் மோதியது

திருச்சி உறையூர் கீழ் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உறையூர் நாச்சியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி விட்டு அந்

Update: 2017-04-16 22:45 GMT

திருச்சி,

திருச்சி உறையூர் கீழ் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உறையூர் நாச்சியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி விட்டு அந்த சாலையை கடக்க முயன்றார். அப்போது சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மூர்த்தி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மூர்த்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டிரைவர் அதிவேகமாக பஸ்சை ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்று பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்து அதன் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் தனியார் பஸ்சின் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை விட்டு இறங்கி தப்பியோடினர். இது குறித்து தகவலறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பஸ்சின் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்