விவசாயிகளுக்காக நடத்தப்படும் போராட்டத்தை அரசியல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டேன்

விவசாயிகளுக்காக நடத்தப்படும் போராட்டத்தை அரசியல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2017-04-16 22:15 GMT
சென்னை,

விவசாயிகள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையில், தமிழகம் தழுவிய ஒரு முழு அடைப்புப் போராட்டத்தை எதிர்வரும் 25-ந்தேதி நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற தீர்மானங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் வகையில், அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தை 22-ந்தேதி சென்னையில் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து 25-ந்தேதி தேதி நடைபெறவுள்ள தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், வணிகர் பெருமக்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் உள்பட அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் ஆக்க மாட்டேன்

மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘ஒரு சில கட்சிகள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் விடுபட்டிருக்கிறார்கள். மீண்டும் அந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?’ என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ‘நீங்கள் இதை அரசியலாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். நான் அப்படி அரசியல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டேன். இது விவசாயிகளுக்காக நடைபெறக்கூடிய, விவசாயிகளின் பிரச்சினைகளை ஒட்டி, அவற்றை மையமாக வைத்து நடைபெறக்கூடிய கூட்டம்’ என்றார்.

திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கூட்டம் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நடந்த கூட்டம். தேர்தலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வறட்சி, குடிநீர் பிரச்சினை நம்மை வாட்டி வருகிறது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தி.மு.க. சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டம் மிகவும் அவசியமானது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘25-ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இது தனிப்பட்ட போராட்டம் அல்ல. தமிழக மக்களின் போராட்டம். நம்முடைய உணர்வுப்பூர்வமான போராட்டம். அந்த வகையில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தி.மு.க. மற்றும் கலந்து கொண்ட அத்தனை கட்சிகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘தமிழகம் வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தபோதும், தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்திலும் மத்திய அரசு நாம் கேட்ட நிதியை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே 25-ந்தேதி நடக்கும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.

மற்றவர்களும் பங்கேற்பார்கள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது, ‘இந்த கூட்டம் மிகவும் அவசியமானது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்ற கட்சிகளும், இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிக்க மாட்டார்கள். அவர்களும் 25-ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் நிச்சயமாக பங்கேற்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார். 

மேலும் செய்திகள்