காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடுவதாக மிரட்டல் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடுவதாக வாலிபர் ஒருவர் மிரட்டி உள்ளார்.

Update: 2017-04-16 20:25 GMT

மங்களூரு,

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடுவதாக வாலிபர் ஒருவர் மிரட்டி உள்ளார். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலை ஏற்க மறுப்பு

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அமின்(வயது 22). இவர் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா மாட்னூர் பகுதியில் தங்கி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும், சம்பியா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்துல் அமின், அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

மேலும் தனது காதலை அவர், அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார். ஆனால் அந்த இளம்பெண், அப்துல் அமினின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

ஆபாசமாக சித்தரித்து...

ஆனாலும் அப்துல் அமின், தன்னை காதலிக்கும்படி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த இளம்பெண் மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் அமின், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணிடம் என்னை காதலிக்க மறுத்தால் உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுபற்றி நேற்று சம்பியா போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பியா போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்துல் அமினை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்