திண்டுக்கல்லில் 2 இடங்களில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல்லில் குடிநீர் வழங்கக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-16 23:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாகல்நகரில் 36–வது வார்டு பகுதிகளில் நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு பின்னர் வினியோகம் செய்யப்பட்டதால், மக்கள் ஆர்வமுடன் குடிநீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது பாம்பன்ஆசாரி தெரு, ஆசாரி தெரு, கிசில்வாதெரு, அப்பியர்தெரு உள்பட 6 தெருக்களில் ஒருசில நிமிடங்களில் குடிநீர் வருவது நின்று விட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நாகல்நகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் மேம்பாலம் அருகே அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகல்நகர் மேம்பாலம், ஆர்.எஸ்.சாலை பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

அப்போது தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி 6 தெருக்களிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதிஅளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் 28–வது வார்டு பகுதிகளான முனியப்பன் கோவில் தெரு, அண்ணாமலையார் சாலை பகுதி, வெள்ளாளர்தெரு, அழகர்சாமி தெரு பகுதிகளில் குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சேரலாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது தங்கள் பகுதியில் குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்