உடுமலை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

உடுமலை அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. எனவே உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும்

Update: 2017-04-16 19:18 GMT
மடத்துக்குளம்,

உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் ஆயிரம் அடிக்கும் கீழ் துளையிட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிமங்கலம் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளும், உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 3 ஊராட்சிகளும் பயன்பெறும் வகையில் ரூ.56 கோடி செலவில் தொடங்கப்பட்ட திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

குழாய் உடைப்பு

ஆனால் சோதனை முறையில் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சோதனை முறையிலேயே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் காலிக்குடங்களுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு குடம் தண்ணீருக்காக குடிநீர் குழாய் வால்வுகளில் கசியும் நீரை பல மணி நேரம் காத்திருந்து பிடித்து செல்லும் ஒருபுறமிருக்க, குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவது வேதனைக்குரியதாக உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் உடுமலையை அடுத்த குறிஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைந்து நீரூற்று போல் குடிநீர் பொங்கி வெளியேறியது.

இதனால் வெளியேறிய குடிநீர் சாலையோர மழைநீர் வடிகால்களில் நிரம்பி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் “குழாய் உடைப்பை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் பல இடங்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு வருகிறது. உடைந்த குழாயை உடனே சீரமைக்க வேண்டும்” என்று கூறினர்.

மேலும் செய்திகள்