குஞ்சிபாளையத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

குஞ்சிபாளையத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-16 23:00 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி- மீன்கரை ரோடு குஞ்சிபாளையம் பிரிவில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடை கோர்ட்டு உத்தரவுபடி மூடப்பட்டது. இதனால் அந்த பகுதி பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் குஞ்சிபாளையம் ஊருக்குள் ரெயில்வே கேட் பகுதியில் குடியிருப்புகள், பள்ளி, கோவில்கள் அருகே ஒரு தனியார் இடத்தில் மதுக்கடை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஞ்சிபாளையம் பொதுமக்கள் கடந்த 10-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் மதுக்கடையை ஊருக்குள் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி சப்- கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் மதுக்கடை அமைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிடாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த குஞ்சிபாளையம் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு குஞ்சிபாளையம் பிரிவில் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குஞ்சிபாளையத்துக்குள் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி (பொறுப்பு), மேற்கு இன்ஸ்பெக்டர் மகேந்திரன், டாஸ்மாக் குடோன் அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.

அப்போது, குஞ்சிபாளையம் ஊருக்குள் மதுக்கடை அமைக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆனைமலை, சேத்துமடை, பொள்ளாச்சி, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு ஊருக்கு செல்லும் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. வாகன ஓட்டிகள், பஸ்சில் சென்ற பயணிகள், மற்ற வாகனங்களில் வந்தவர்கள் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்