‘மாருதா’ புயல் சின்னம் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான ‘மாருதா’ புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Update: 2017-04-16 23:15 GMT

கடலூர் முதுநகர்,

வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருந்தது. அது நேற்று முன்தினம் அந்தமானுக்கு அருகே 500 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயல் சின்னமாக மாறி, அந்தமானுக்கு தென்மேற்கு திசையில் 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் சின்னத்திற்கு ‘மாருதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் சின்னம் உருவானதை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் நேற்று காலை 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தூர புயல் எச்சரிக்கையை குறிப்பதாகும்.

இன்று கரையை கடக்கும்

இந்த ‘மாருதா’ புயல் இன்று(திங்கட்கிழமை) மியான்மர் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் பற்றி துறைமுக அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறியுள்ளது. மாருதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. வறண்ட வானிலையே நீடிக்கும் என்றார்.

மேலும் செய்திகள்