தலைவாசல் அருகே பள்ளி ஆசிரியை கொலை: கேபிள் டி.வி. அதிபரின் இன்னொரு மகன் போலீசில் சரண்–2 பேர் தலைமறைவு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரில் 10 பேர் மீது வழக்கு
தலைவாசல் அருகே பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் கேபிள் டி.வி. அதிபரின் இன்னொரு மகன் போலீசில் சரண் அடைந்தார்.
தலைவாசல்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகழுர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர், விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த கேபிள் டி.வி. அதிபர் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகன்கள் விஜய் (25), ரமேஷ் ஆகியோருக்கும் இடையே கேபிள் டி.வி. தொழில் சம்பந்தமாக போட்டி இருந்து வந்தது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்து, சபரிமலைக்கு சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் சத்யாவின் வீட்டிற்கு விஜய் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த விஜய், தான் வைத்திருந்த கத்தியால் சத்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையறிந்த பொதுமக்கள் விஜயை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
4 பேர் மீது வழக்குஇதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த விஜயின் தந்தை ராஜேந்திரனையும் பொதுமக்கள் தாக்கினர். இதில் ராஜேந்திரன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விஜய் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவின் உடலையும், பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராஜேந்திரனின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த விஜய், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக சத்யாவின் தந்தை சந்திரன் தலைவாசல் போலீசில் புகார் செய்தார். அதில், சத்யா கொலை தொடர்பாக விஜய், இவரது சகோதரர் ரமேஷ் மற்றும் நண்பர்கள் ராஜேஸ்குமார், பிரதீப்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் விஜய், ரமேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேபிள் டி.வி. அதிபர் மகன் சரண்இதனிடையே, நேற்று ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரமேஷ் திடீரென சரண் அடைந்தார். மேலும், அவர் ராஜேந்திரனை அடித்து கொலை செய்ததாக சுதாகர், சந்திரன், ராஜநரசிம்மன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுதாகர் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் விஜய், ரமேஷ் ஆகியோரின் வீட்டையும், அவர்கள் நடத்தி வந்த கணினி மையத்தையும் சிலர் அடித்து சூறையாடியதாகவும், மேலும் பொது சொத்துக்களை சேதமாக்கியதாகவும் 10 பேர் மீது ஆறகழுர் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மேலும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 பேருக்கு வலைவீச்சுமேலும், சத்யா கொலை சம்பந்தமாக தலைமறைவாக உள்ள விஜயின் நண்பர்கள் ராஜேஸ்குமார், பிரதீப்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் விஜய், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:– எங்களது குடும்பத்தினருக்கும், மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கும் கேபிள் டி.வி. தொழில் போட்டி இருந்து வருகிறது. மாரிமுத்து சபரிமலைக்கு சென்றுவிட்டதை அறிந்து, சத்யாவின் வீட்டிற்கு சென்றேன். அப்போது, அவர் மட்டும் இருந்தார். ஏற்கனவே, 3 ஆண்டுகளாக சத்யாவுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து, அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சத்யாவின் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர், அவர்கள் சத்யாவின் உடலை ஆறகழுரில் உள்ள மயானத்தில் தகனம் செய்தனர்.