கிராமப்புற ஏரி, குளங்களை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற்றுத் தருவேன்

கிராமப்புற ஏரி, குளங்களை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற்றுத் தருவேன் கவர்னர் கிரண்பெடி உறுதி;

Update: 2017-04-15 23:15 GMT

வில்லியனூர்

கிராமப்புற ஏரி, குளங்களை மேம்படுத்தினால் தான் மாநிலம் வளர்ச்சி அடையும். அதற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவேன் என்று அதிகாரிகளிடம் கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.

ஆகாய தாமரை செடிகள்

புதுவையில் தங்கி இருக்கும்போது கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் பொது இடங்களுக்குச் சென்று குறைபாடுகளை கண்டுபிடித்து அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக துப்புரவுப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதேபோல் ஏரி, குளங்கள், அரசு அலுவலகங்களை பார்வையிட்டும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி அதிகாரிகளுடன் நேற்று வில்லியனூருக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். சங்கராபரணி ஆற்றை பார்வையிட்டார். அங்கு அதிக அளவில் வளர்ந்து கிடந்த ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். ஆகாய தாமரை செடிகளை தனி நபரால் அகற்ற முடியாது. இதற்கென்று திட்டவரைவோலை தயாரித்து அதன்பிறகு தான் அகற்ற முடியும் என்று அவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிதி பெற்றுத்தருவேன்

இதைக்கேட்ட கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளிடம் கூறுகையில், ‘அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் கிராமப்புற பகுதியில் உள்ள ஏரி, குளம், ஆறு போன்றவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம். கிராமப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரினால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். புதுவை கடற்கரையை ரூ.36 கோடியில் மேம்படுத்துவதை விட, கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தினால்தான் மாநிலம் முழுமையாக வளர்ச்சி அடையும். இதற்கான திட்ட வரைவோலையை அதிகாரிகள் தயார் செய்து கொடுத்தால் மத்திய அரசிடம் இருந்து நான் நிதி பெற்றுத் தருகிறேன். நான் புதுவையில் 13 மாதங்களே இருப்பேன். அதுவரை இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவேன்’ என்றார்.

சலவைத் தொழிலாளர்கள் புகார்

இந்த ஆய்வை முடித்துக்கொண்டு வில்லியனூரில் உள்ள சலவைக்கூடத்துக்கு கிரண்பெடி சென்றார். அப்போது அவரிடம் அங்கு இருந்த தொழிலாளர்கள், கழிவறை, குடிதண்ணீர், சலவை செய்ய தண்ணீர், சுற்றுச் சுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை அழைத்து விளக்கம் கேட்டார். சலவைத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் அவருக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

கோவில்கள், குளங்கள் விவரம்

இதன்பின் வில்லியனூரில் உள்ள பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் கோவிலுக்கு கிரண்பெடி சென்றார். அங்கு அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலை கவர்னர் சுற்றிப்பார்த்தார். கோவிலின் சிறப்புகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து கோவில் குளத்தை பார்வையிட்ட கவர்னர் குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடவேண்டும். குளத்தை எப்போதும் தூய்மையாக வைத்து இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற கோவில்கள், குளங்கள் போன்றவற்றின் விவரங்களை விரைவில் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். இதன்பின் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு கிரண்பெடி திரும்பினார்.

மேலும் செய்திகள்