பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன்: புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்

புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதுகுறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-04-15 23:45 GMT
புதுச்சேரி

முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐகோர்ட்டு கிளை

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கலாசார மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.14 கோடியே 83 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்த அகில இந்திய வக்கீல்கள் சங்க தலைவர் ஆதிஸ் அகர்வால் என்னை சந்தித்து புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, புதுவை மாநிலத்தில் ஐகோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்து வலியுறுத்தினேன். அப்போது ஏதுவான சூழல் இல்லை. தற்போது புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க ஏதுவான சூழ்நிலை உள்ளது.

சட்டசபையில் தீர்மானம்

புதுவையில் தற்போது 11 நீதிமன்றங்களும், காரைக்காலில் 6 நீதிமன்றங்களும், மாகி, ஏனாமில் 3 நீதிமன்றங்களும் உள்ளன. வழக்குகள் அதிகப்படியாக வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் புதுச்சேரி, காரைக்காலில் 33,899 வழக்குகளுக்கு தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளில் 5 ஆயிரம் வழக்குகளுக்கும், மணிப்பூரில் 1,900 வழக்குகளுக்கும், மேகாலயாவில் 1,724 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. அங்கெல்லாம் ஐகோர்ட்டு உள்ளது.

எனவே அதைவிட அதிக வழக்குகளை கையாளும் புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை உள்ளது. பிரெஞ்சு ஆட்சி காலத்தில் புதுச்சேரியில் ஐகோர்ட்டு கிளை இருந்ததற்கான பழைய பாரம்பரியமும் உள்ளது. அதுபோல் புதுவையைச் சேர்ந்த வக்கீல்கள் அதிக அளவில் சென்னை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே புதுச்சேரியில் ஐகோர்ட்டு கிளை அமைக்க அனைத்து வகையிலும் தயாராகவே உள்ளது. இதற்காக முதல்கட்டமாக புதுவை சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுவோம்.

சட்ட வரையறை

பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்போம். அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம். சட்ட வரையறை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புவோம்.

நான் டெல்லி செல்லும் போது பிரதமர், மத்திய சட்டத்துறை மந்திரி ஆகியோரை நேரில் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்துவேன். புதுச்சேரியில் ஐகோர்ட்டு கிளை அமைந்தால் முன்சீப் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு செல்லும்போது அதிக செலவு செய்யும் நிலை குறையும்.

பெட்ரோல், டீசலுக்கு தினம் ஒரு விலை

வருகிற மே 1-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறையை புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் மத்திய அரசு கொண்டுவர உள்ளது. பரிசோதனை முறையில் புதிய திட்டங்களை நிறைவேற்றும் போது மத்திய அரசுக்கு புதுச்சேரி ஞாபகம் வருகிறது. நிதி ஒதுக்கீடு செய்வதில் மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது.

இந்த விற்பனை முறையை அமல்படுத்தினால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும். இரவு 12 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படும். முதல்நாளில் விலை அதிகமாக இருந்து விட்டு அடுத்த நாளில் விலை குறையும்போது ஏற்படும் இழப்பு பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை சேரும். பொதுமக்களிடமும் குழப்பம் ஏற்படும்.

எனவே இது நடைமுறைக்கு உதவாது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக நான் மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன்.

ரூ.2 லட்சம் கோடி லாபம்

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாளுக்கு ஒரு முறை நிர்ணயிக்கின்றன. இப்படி நிர்ணயிக்கும் போது விலை அதிகரிப்பால் அந்த தொகை பயனாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. விலை குறையும் போது கிடைக்கும் தொகை பயனாளிகளுக்கு சேராமல் மத்திய அரசின் கணக்கில் சேருகிறது. இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி மத்திய அரசுக்கு லாபம் கிடைக்கிறது. நியாயமாக இந்த பயன் பயனாளிகளைத் தான் சென்றடைய வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். 

மேலும் செய்திகள்