சிறந்த நடிப்புக்காக ‘பட்னாவிசும், உத்தவ் தாக்கரேயும் தேசிய விருது பெற தகுதி படைத்தவர்கள்’ சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

‘‘சிறந்த நடிப்புக்காக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தேசிய விருது பெற தகுதி படைத்தவர்கள்’’ என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் விமர்சித்தார்.

Update: 2017-04-15 23:00 GMT

புல்தானா,

‘‘சிறந்த நடிப்புக்காக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தேசிய விருது பெற தகுதி படைத்தவர்கள்’’ என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் விமர்சித்தார்.

எதிர்க்கட்சியினர் பேரணி

பயிர் கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ‘சங்கார்ஷ் யாத்திரை’ என்ற பெயரில் எதிர்க்கட்சியினர் மாநிலம் முழுவதும் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் 2–ம் கட்டத்தை புல்தானா மாவட்டம் சிந்துகேத்ரஜா பகுதியில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:–

கடந்த வாரம் தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் மும்பை மாநகராட்சி தேர்தலின்போது, ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து கொண்டதற்காக, சிறந்த நடிப்பின் அடிப்படையில் அவர்கள் இருவரும் தேசிய விருது பெற தகுதி படைத்தவர்கள் என்று நான் கருதினேன்.

சிவசேனா மீது தாக்கு

பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியின் பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கு ஆதரவாக சிவசேனா குரல் கொடுத்ததை பார்த்தபோது, உத்தவ் தாக்கரே டெல்லியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சந்திப்பில் பங்குபெற மாட்டார் என்று எண்ணினேன். ஆனால், அதற்கு முரணாக நடந்து முடிந்து விட்டது.

சிவசேனா எம்.பி. ஒருவர் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டதை கண்டித்து அக்கட்சி எம்.பி.க்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தனர். அதே வேளையில், பாராளுமன்றத்தில் விவசாயிகளின் பிரச்சினையை எழுப்பி, சிவசேனா உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.

இவ்வாறு ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித்பவார், ஜெயந்த் பாட்டீல், சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மி, மக்கள் குடியரசு கட்சி தலைவர் ஜோகேந்திர கவாடே ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்