பார்வதிபுரத்தில் மேம்பால பணியால் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2017-04-15 22:45 GMT
நாகர்கோவில்,


நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக பார்வதிபுரம், ஒழுகினசேரி, செட்டிகுளம் ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் மின் வாரிய அலுவலகம் முன் இருந்து முழுவீச்சில் நடந்து வருகின்றது. பாலப்பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் வெட்டூர்ணிமடத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே பார்வதிபுரத்தில் இருந்து வெட்டூர்ணிமடம் வழியாக வடசேரி செல்ல வேண்டிய வாகனங்கள் பால்பண்ணை சந்திப்பு, கிறிஸ்து நகர் பிரதான சாலை வழியாக வெட்டூர்ணிமடம் சென்று வடசேரி செல்ல வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்


மேம்பால பணிகள் நடப்பதால் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கேரளாவில் இருந்து நாகர்கோவில் நகருக்குள் வரும் வாகனங்கள் பார்வதிபுரத்தை கடப்பதற்கு 15 நிமிடங்கள் ஆகின்றன. இதுபோல நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் பார்வதிபுரத்தை கடந்து செல்ல வெகு நேரம் ஆகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் பார்வதிபுரத்தில் நேற்றும் இருந்தது.

பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து கேரளா செல்லும் சாலையிலும், வெட்டூர்ணிமடம் செல்லும் சாலையிலும் வாகனங்கள் வெகு தூரம் அணி வகுத்து நின்றன. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், நிழலில் ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்