மார்த்தாண்டம் அருகே குழாயில் தண்ணீர் பிடித்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

மார்த்தாண்டம் அருகே குழாயில் தண்ணீர் பிடித்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 2 வாலிபர்களை பொது மக்கள் பிடித்தனர்.

Update: 2017-04-15 23:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி, மலையரம் தோட்டத்தை சேர்ந்தவர் ரசல்ராஜ். இவருடைய மனைவி பூமா (வயது 45). இவர் நேற்று மதியம் தன் வீட்டின் அருகே உள்ள பொது குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒருவர் பூமாவின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். உடனே மோட்டார் சைக்கிள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.

பொதுமக்கள் பிடித்தனர்


உடனே பூமா, திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். அதைத்தொடர்ந்து அங்கிருந்த சிலர் மோட்டார் சைக்கிளில், சங்கிலி பறித்து சென்றவர்களை துரத்தி சென்றனர். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக சங்கிலி பறித்த வாலிபர்களால் தப்பி செல்ல முடியவில்லை. உடனே அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் 2 பேரும் மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் பெயர் மகி (21)நெய்யாற்றின் கரை, இன்னொருவர் சுபின் (22) நெடுமங்காடு என்றும் கூறினார்கள். மகி, சுபின் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு குமரி மாவட்டத்தில் நடந்த மற்ற சங்கிலி பறிப்புகளிலும் தொடர்பு உண்டா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்