நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க ரெயிலில் புறப்பட்டு வந்த மாணவர்கள் கைது

நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க கோவையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு வந்த மாணவர்கள் உள்பட 7 பேரை குளித்தலை ரெயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-15 23:00 GMT
கரூர்,

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து பொதுநல எழுச்சி மாணவர் இயக்கத்தை சேர்ந்த சிலர் பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலில் வருவதாக கரூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் கரூர் ரெயில் நிலைய முதலாவது நடைமேடையில் குவிக்கப்பட்டனர். அந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் அமர்ந்து இருந்த பெட்டியை போலீசார் சூழ்ந்து கொண்டனர்.

கண்காணிப்பு

பின்னர் சிறிது நேரத்தில் கரூரில் இருந்து ரெயில் புறப்பட தயாரானபோது, ரெயிலில் அமர்ந்து இருந்த பெண் ஒருவர் திடீரென்று ரெயிலில் இருந்தபடி, எங்களை போலீசார் கோவையில் இருந்து கண்காணித்து வருகின்றனர். நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் எதிராக போலீசார் செயல்படுகிறார்கள். நாங்கள் நெடுவாசல் போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

7 பேர் கைது

இதைத்தொடர்ந்து கரூர் போலீசார் இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர்களை கைது செய்ய குளித்தலை ரெயில் நிலையத்தில் கரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மதியம் காத்திருந்தனர். இதில் பெண் போலீசார் மாற்று உடையில் இருந்தனர்.

அந்த ரெயில் பகல் 12.35 மணியளவில் குளித்தலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரெயில் பெட்டி ஒன்றில் வந்த பொதுநல எழுச்சி மாணவர் இயக்கத்தை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

அப்போது கைது செய்யப்பட்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதனால் குளித்தலை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவையை சேர்ந்த வளர்மதி (வயது 23), தீபக் (22), ஸ்டாலின்(19), சூரியநாராயணன்(24), தினேஷ்குமார்(19), தினேஷ்(25), கார்த்திக்(19) என்றும், இதில் கார்த்திக் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருவதாகவும், மற்றவர்கள் கல்லூரி மாணவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்