தமிழகம் முழுவதும் 40 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன

தமிழகம் முழுவதும் 40 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் கூறினார்.;

Update: 2017-04-15 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை, வீரராக்கியம், திருமாநிலையூர் மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதி, காகிதபுரம் ஆகிய இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ள இடங்களை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி செல்வம், கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நீதிபதி செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 40 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 60 சதவீத பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியார் இடங்களில் பெரும்பாலும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. காலக்கெடுவிற்குள் அகற்றாவிட்டால் அரசு மூலம் அகற்றி 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். வழக்கு காரணமாக அகற்ற முடியாது எனக்கூறிவரும் இடங்களில் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன் வரவேண்டும்

சீமைக்கருவேல மரங்களை அகற்ற இதுவரை பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.16 லட்சம் நீதிமன்ற பதிவாளர் பெயருக்கு வந்துள்ளது. இதில் ரூ.9 லட்சம் மாவட்ட நிர்வாகங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணி தொய்வின்றி தொடர்ந்து நடைபெற பொதுமக்கள் தங்களது சமூக பொறுப்பை உணர்ந்து தாமாகவே அகற்ற முன்வர வேண்டும். பங்களிப்பு தொகை வழங்க விரும்புபவர்கள் நீதிமன்ற பதிவாளர் வங்கி கணக்கில் வரைவோலையாக செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக கரூரை சேர்ந்த 4 பேர் ரூ.25 ஆயிரம் மற்றும் கரூர் கோட்டாட்சியர் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை நீதிபதியிடம் வழங்கினர்.

ஆய்வின் போது கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஹேமலதா, போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்