துறையூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

துறையூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2017-04-15 22:45 GMT
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது சொரத்தூர். இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நேற்று சொரத்துார் கிராம மக்கள் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. தலைமையில், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞர் அணி கிட்டப்பா, முன்னாள் நகரசபை உறுப்பினர் சுதாகர், மாவட்ட பிரதிநிதி சரவணன் உள்ளிட்ட தி.மு.க.வினரும் மறியலில் பங்கேற்றனர்.

இதனால் துறையூரில் இருந்து பெரம்பலூர் சென்ற பஸ்களும், பெரம்பலூரில் இருந்து துறையூர் வந்த பஸ்களும் அப்பகுதியில் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்