தஞ்சையில் 19-வது நாளாக நடந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்

ஒற்றை தீர்ப்பாய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் 19-வது நாளாக நடந்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.;

Update: 2017-04-15 23:00 GMT
தஞ்சாவூர்,

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைக்க வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதிக்கக்கூடாது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஒற்றை தீர்ப்பாய மசோதாவை திரும்ப பெற வேண்டும். தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், தரிசு நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி இரவு, பகலாக நடைபெற்று வந்தது. இந்த போராட்டம் நேற்று 19-வது நாளாக நீடித்தது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

இதில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அன்பழகன், கோவி.செழியன், ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் விவசாய சங்கத்தினரும் திரளாக பங்கேற்று அடுத்தகட்டமாக போராட்டத்தை எந்த வகையில் தீவிரப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினர். செங்கிப்பட்டி, காமாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள், சிறுவர்கள் கரும்புகளுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயி ஒருவர் மொட்டை அடித்து கொண்டு கலந்து கொண்டார்.

வாபஸ்

இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகள், விவசாய சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்த காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் மாலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 19 நாட்களாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஆதரவு அளித்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை.

எனவே, இந்த போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. அடுத்து, இந்த போராட்டத்தை முழு வீச்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் அடுத்தமாதம் (மே) 15-ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்