பழனி–கொடைக்கானல் மலைச்சாலையில் ஓடும் வேனில் தீப்பிடித்தது
பழனி– கொடைக்கானல் மலைச்சாலையில் ஓடும் வேனில் தீப்பிடித்தது. வேனில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 16 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பழனி,
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 16 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து அவர்கள் ஒரு சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். வேனை கொச்சி அருகேயுள்ள துண்டுபரம்பை சேர்ந்த அனீத் (வயது 24) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை நேரத்தில் பழனிக்கு வந்தனர்.
பின்னர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். பழனி– கொடைக்கானல் மலைச்சாலையில் சவுரிக்காடு அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேளையில் வேனின் முன்பகுதியில் தீப்பிடித்து கரும்புகை கிளம்பியது. இதை பார்த்த அனீத் உடனடியாக வேனை சாலையோரமாக நிறுத்தினார்.
தீ பற்றி எரிந்ததுபின்னர் வேனில் பயணம் செய்தவர்களை உடனடியாக கீழே இறங்கும் படி எச்சரிக்கை செய்தார். இதையடுத்து வாலிபர்கள் முண்டியடித்து வேனில் இருந்து இறங்கினர். அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் வேன் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து அவர்கள் வேனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
வேன் முழுவதும் தீ பரவியதால் கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து பழனி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்புபின்னர் வேனில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து டிரைவர் அனீத் கொடைக்கானல் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்த சுற்றுலா வேனின் மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக பழனி–கொடைக்கானல் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.