ஆண்டிப்பட்டி அருகே சாராயம் காய்ச்சுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பரபரப்பு போலீஸ் சோதனையில் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

ஆண்டிப்பட்டி அருகே சாராயம் காய்ச்சுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பரபரப்பு

Update: 2017-04-15 21:45 GMT

ஆண்டிப்பட்டி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பபட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாகவும், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி பானை, கருப்பட்டி உள்ளிட்ட சாராயம் காய்ச்சுவதற்கான பொருட்களையும், 2 பேரையும் கைது செய்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:–

கஞ்சா விற்பனை

ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பபட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதை தொடர்ந்து, அந்த பகுதியில் சென்று வீடுகளில் சோதனை நடத்தினோம். அப்போது அங்கு ஓடைப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தோம். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குருசாமி (வயது 40), மாரிமுத்து (42) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்