ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி என்ஜினீயர்கள் 2 பேர் கைது

ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி என்ஜினீயர்கள் 2 பேரை கைது செய்து ஊழல் தடுப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2017-04-15 19:52 GMT

பெங்களூரு,

ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி என்ஜினீயர்கள் 2 பேரை கைது செய்து ஊழல் தடுப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

ராமநகர் மாவட்டம் அம்மளி தொட்டி பகுதியில் லாரி மூலம் காவிரி நீரை வினியோகம் செய்வதற்கான டெண்டரை ஒப்பந்ததாரர் ஒருவர் எடுத்திருந்தார். இதற்காக அவர் மண்டியாவில் உள்ள காவிரி நீர்ப்பாசன துறை அலுவலகத்தில் முன்பணமாக ரூ.65 ஆயிரம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் காவிரி நீர் வினியோகம் செய்வதற்கான டெண்டர் முடிவடைந்தது.

இதனால், அவர் மண்டியாவில் உள்ள காவிரி நீர்ப்பாசன துறை அலுவலகத்துக்கு சென்று முன்பணத்தை கேட்டு மனு கொடுத்துள்ளார். ஆனால் அங்கு உதவி என்ஜினீயர்களாக இருக்கும் ஜோதி, ஷோபா ஆகியோர், முன்பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர்.

பெண் உதவி என்ஜினீயர்கள் 2 பேர் கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இதுகுறித்து ஊழல் தடுப்பு படையினரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு படையினர் அவருக்கு சில அறிவுரைகளை கூறினர். அதன்பேரில் ஒப்பந்ததாரர், பெண் உதவி என்ஜினீயர்களை சந்தித்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஒப்பந்ததாரர் நேற்று காலை மண்டியாவில் உள்ள காவிரி நீர்ப்பாசன துறை அலுவலகத்துக்கு சென்று பெண் உதவி என்ஜினீயர்கள் ஜோதி, ஷோபா ஆகியோரை சந்தித்து ரூ.10 ஆயிரம் லஞ்சத்தை கொடுத்தார். அப்போது அவர்கள் அந்த பணத்தை வாங்கினர். அந்த சமயத்தில் அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்பு படையினர் பெண் உதவி என்ஜினீயர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் ஊழல் தடுப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்