6¼ பவுன் நகை பறிமுதல் திருச்சியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2017-04-15 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாநகரில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோட்டை, காந்திமார்க்கெட், பாலக்கரை ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குஉட்பட்ட இடங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலக்கரை முதலியார் சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த காஜாபேட்டை பசுமடம் குடிசை பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (வயது24), எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்த அஜித் என்கிற கிளிண்டன் (19) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

இதில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று அப்பல்லோ மருத்துவமனை அணுகுசாலை அருகே, ஆலந்தெரு, மேலப்புதூர் சுரங்க பாதை அருகே ஆகிய இடங்களில் தனியாக சென்ற பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6¼ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் அஜித், உறையூரை சேர்ந்த 18 வயது சிறுவனுடன் சேர்த்து ஒருவரிடம் செல்போனை வழிப்பறி செய்தது தெரியவந்தது. அந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான மதன்ராஜ், அஜித் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சங்கிலி பறிப்பு திருடர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் அருண் பாராட்டினார். 

மேலும் செய்திகள்