மஞ்சூர் அருகே குடிநீர் கேட்டு 4 கிராம மக்கள் சாலை மறியல்
மஞ்சூர்அருகே குடிநீர் கேட்டு 4 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூர்
நீலகரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் நீரோடைகள், குளம், குட்டைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறையதொடங்கியது. மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் நீர்தேக்கங்களை முறையாக தூர்வாராத காரணத்தால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் மக்கள் குடிநீரை தேடி குளம் குட்டைகளுக்கு பல கிலோமீட்டர் தலை சுமையாக தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது.
முற்றுகைஇந்த நிலையில் மஞ்சூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடுமையான குடிநீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் அவ்வப்போது குடிநீர் கேட்டு கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருவது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட ஓணிகண்டி, அண்ணாநகர், காமராஜ்நகர், பவுத்தி கம்பை, ஆதிவாசி காலனி ஆகிய 4 கிராம மக்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டதாக தெரிகிறது.
சாலை மறியல்இதனை தொடர்ந்து மஞ்சூர் பகுதி பொதுமக்கள் மஞ்சூர்–கோவை பிரதான சாலையான ஓணிகண்டி பஜாரில் பெண்கள் 100– க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். பலர் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த மறியலால் இதனால் மஞ்சூரிலிருந்து கோவைக்கு செல்லும் வாகனங்களும், கோவை மற்றும் கெத்தை ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சூர், ஊட்டிக்கு சென்ற அரசு மற்றும் தனியார் வாகனங்களும் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஊட்டி மற்றும் கோவைக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புசாலை மறியல் குறித்த தகவல் அறிந்ததும் மஞ்சூர் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதரன், ஹதர் அலி மற்றும் பேரூராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 4 கிராமங்களுக்கும் சீராக குடிநீர் வினியோகிக்கவும், பழுதடைந்த குழாய்களை உடனடியாக மாற்றி தரப்படும் என்று உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலை மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.