ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்
ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேட்டி
ஈரோடு,
ஜெயலலிதாவின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தினால் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் நேற்று ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவின் திட்டங்கள்மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்கள் திட்டங்களை ஏராளமாக அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார். அவர் அறிவித்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
ஆனால் தற்போது மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் வேகம் குறைவாக உள்ளது. குறிப்பாக பெருந்துறை தொகுதிக்கு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தருவதாக 110 விதியின் கீழ் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் தற்போதைய அரசு இதுவரை அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. இந்தநிலையில் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு இருந்தால் பெருந்துறை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கும். இதுபோல்தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலை உள்ளது.
மக்களை சந்திக்க வேண்டும்முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈரோடு மாவட்டம் எப்போதும் சிறப்புக்கு உரியது. ஆனால் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் பின்தங்கி இருக்கிறது. எனவேதான் ஜெயலலிதாவின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். இனி வரப்போகும் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் கட்சி மக்களை சந்திக்க வேண்டியது உள்ளது.
கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடியது முதல் இந்த நாள்வரை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஆதரவான நிலையிலேயே நான் இருந்து வருகிறேன். இந்தநிலையில் மக்களுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம். அரசின் நடவடிக்கைகளால் மக்கள் மனதில் வெறுப்பு ஏற்படும் நிலைக்கு நாம் சென்று விடக்கூடாது. நாம் புதிதாக எதுவும் செய்யவேண்டியது இல்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை மிக விரைவாக செயல்படுத்தினால் போதும் என்பதே எனது கோரிக்கை. ஆட்சியையும் கட்சியையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல் இருக்க மக்களைப்பற்றி சிந்தித்து வறட்சி பாதிப்பில் இருந்து மக்களை மீட்க வேண்டும். ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் பெயரில் ஆட்சி செய்யும் முதல்–அமைச்சரும் பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.
இவ்வாறு தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.