காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூரியர் நிறுவன தொழிலாளி தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெருந்துறை அருகே வி‌ஷம் குடித்து கூரியர் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-04-15 22:00 GMT

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பெரிய கொடிவேரி மேடு அருகே உள்ள தேம்பில் காலனியை சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மனைவி திலகவதி. இவர்களுடைய மகன் பபின் (வயது 21).

சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் பபின் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு சத்தியமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதுபற்றி தெரியவந்ததும், 2 பேரின் பெற்றோர்களும் அவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் பபின் மனமுடைந்து காணப்பட்டார்.

சாவு

இந்த நிலையில் பெருந்துறை அருகே சிப்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் பபின் வந்து உள்ளார். தன்னுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு பபின் வந்தார். இதனால் அவர் தான் ஏற்கனவே வாங்கி வந்த வி‌ஷத்தை குடித்தார். இதில் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பபின் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்