சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2017-04-15 23:15 GMT

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ளது கெம்பநாயக்கன்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

 இதைத்தொடர்ந்து அந்த கடை அகற்றப்பட்டது. இந்த நிலையில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பதிலாக கெம்பநாயக்கன்பாளையத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பாளைத்தில் உள்ள தூக்கு மேடை பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை அமைக்க புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

 இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த 200 பெண்கள் உள்பட 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடை அமைய இருக்கும் இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கூடி நின்று டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு டாஸ்மாக் அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர். பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தனர்.

 இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்