முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை: 5–வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு போலீசார் எச்சரிக்கை கடிதம் அனுப்பினர்

சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.;

Update:2017-04-16 04:15 IST

மதுரை,

சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். கடந்த 10–ந்தேதி மதுரை சக்குடி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற முருகனை காரில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து வேம்பத்தூரை சேர்ந்த கருப்பு (46), புதுக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ்குமார்(43), முத்துராஜா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மதுரை 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று 5–வது நாளாக முருகனின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 நாட்களாக உடல் மதுரை பெரிய ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் முருகனின் வீட்டிற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதில், உடலை வாங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முருகனின் உடலை உறவினர்கள் வாங்காவிட்டால், காவல்துறை சார்பில் உடல் அடக்கம் செய்யப்படும்” என்றனர்.

மேலும் செய்திகள்