ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு வன ஊழியர் கழுத்து அறுத்துக் கொலை போலீசார் விசாரணை

ஸ்ரீமுஷ்ணம் அருகே வன ஊழியர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-04-15 23:00 GMT

ஸ்ரீமுஷ்ணம்,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம்–தண்டங்காரங்குப்பம் மெயின்ரோட்டில் வாலீஸ்பேட்டை என்ற பகுதியில் சாலையோரமாக 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நேற்று பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அந்த பகுதி மக்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஜான்போஸ்கோ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, அந்த பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இது பற்றி ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் தகவல் கொடுத்தார்.

வன ஊழியர்

அதன்பேரில், சேத்தியாத்தோப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக கிடந்தவரின் சட்டைப்பையில் சிறிய டைரி, செல்போன் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் காட்டுமன்னார்கோவில் விஸ்வநாதன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன் (வயது 50) என்பதும், இவர் ராமாபுரம் பகுதியில் வன ஊழியராக வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

மேலும், வனப்பகுதியில் மரங்களை வெட்டவோ அல்லது வன விலங்குகளை வேட்டையாடவோ வந்த கும்பலை வன ஊழியர் கணேசன் விரட்டியடித்து இருக்கலாம். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கணேசனின் செல்போன் எண்ணில் கடந்த 2 நாட்களாக தொடர்பு கொண்ட நபர்களின் பட்டியலையும் சேகரித்து, அந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கணேசனின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்