குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்களால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் அருகே உள்ள கொடிக்கால்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது வறட்சி மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்து கொண்டு இருந்ததால், கலெக்டரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சீராக குடிநீர் வேண்டும்இது குறித்து அவர்கள் கூறியதாவது:–
கொடிக்கால்புதூரில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 6 மாத காலமாக காவிரி குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து குடிநீர் தொட்டி ஆபரேட்டரிடம் கேட்டால் அவர் முறையான பதில் தருவது இல்லை. மாறாக தரக்குறைவாக பேசி வருகிறார். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, எங்கள் பகுதிக்கு குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மனு கொடுக்க வந்தோம். ஆனால் அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடப்பதால், நாளை (திங்கட்கிழமை) மனு கொடுக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். எனவே, நாளை கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்ததால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.